ஞாயிறு, 10 ஜனவரி, 2016

நுகர்வோருக்கு தேவை விழிப்புணர்வு

உணவு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள்:
மக்களுக்கு தேவை விழிப்புணர்வு

  தரமற்ற உணவுப் பொருள்களை விநியோகித்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம், தவறான குறியீடு செய்து விற்றால் ரூ.3 லட்சம் அபராதம், உணவுப் பொருள்கள் பற்றி உண்மைக்கு மாறான விளம்பரம் செய்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம், உணவுப் பொருள்களில் வேறு பொருள்களை சேர்த்து விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் உத்தரவுகளை நடைமுறைப் படுத்த மறுத்தால் ரூ.2 லட்சம் வரை அபராதம், சுகாதாரத்தை புறக்கணித்து கவர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு உணவுப் பொருள்களை தயாரித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம், பாதுகாப்பற்ற உணவை வைத்து இருந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம், உணவுப் பாதுகாப்பு அதிகாரியின் செயல்பாட்டை தடுத்தாலோ, ஆள்மாறாட்டம் செய்தாலோ ரூ.5 லட்சம் வரை அபராதம், இப்படி குறைபாடுகளுக்கு அபராதம் விதிக்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
 இந்த விதிமுறைகள் எல்லாம் வேறு எங்கோ ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அல்ல, நமது இந்தியாவில்தான். ஆச்சரியமாக இருக்கிறதா?  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டத்தில்தான் மேற்கண்ட அபராதப் பட்டியல் காணப் படுகிறது. ஆனால் இச்சட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுகின்றனவா? மக்களிடம் கேட்டால் எங்கே  என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.
  மேலாளராக பதவி உயர்வு வேண்டுமா, உழைப்பும் திறமையும் தேவையில்லை,   சலவைப் பௌடரை மாற்றினால் போதும். சோடாதான் மனிதனின் தலைமைப் பண்பின் உந்துசக்தி என்று ஒரு விளம்பரங்கள் அடித்துக் சொல்கின்றன. இந்த ஊக்க பானத்தை அருந்தினால் உடனேயே 3 அங்குலம் குழந்தைகள் கூடுதலாக வளர்ந்து விடுவார்கள் என்கிறது மற்றொரு விளம்பரம். கத்தரிக் காயா, பீன்ஸா காய்கறிகளை யாராவது உணவில் சேர்ப்பார்களா? நாங்கள் தரும் ஊட்டச் சத்து உணவை கொடுத்தால் போதும், அனைத்து காய்கறி சத்துகளும்  வந்துவிடும். சாப்பிடாத குழந்தை சாப்பிடத் தொடங்கி வேகமாக வளர்ந்து விடும் என்றெல்லாம் மக்களுக்கு விளக்க உரை நிகழ்த்துகின்றன.
 அம்மாக்களாகவும், மருத்துவர்களாகவும், வந்து மக்களை ஏமாற்றுவதில் இந்திய விளம்பரங்களுக்கு ஈடு இணையே இல்லை. இப்படி எல்லாம் மேலை நாடுகளில் விளம்பரம் செய்துவிட முடியாது. விளம்பரத்தில் உள்ளபடி இல்லா விட்டால், அப்பொருள்களை சந்தைப் படுத்தவே முடியாது. ஏமாந்தவர்கள் இந்தியர்கள்தான் என்பதை பறை சாற்றுவதுதான் இந்த ஏமாற்று விளம்பரங்கள்.
 ஆனால் இந்திய சந்தைகளையும் ஊடக விளம்பரங்களையும் பெருவாரியாக ஆக்கிரமித்து, மக்களின் வருவாயில் பெரும்பகுதியை கபளீகரம் செய்து, பல்லாயிரம் கோடிகளை வாறிச் செல்லும் கார்பரேட் நிறுவனங்கள்தான் இந்தியாவை ஆளப் போகின்றன. 
 இப்படி கோடிகளை அள்ள அப்பாவி மக்களை திசை திருப்பும் விளம்பரங்கள் ஒரு புறம், வீடுகளில் உணவு தயாரிப்பது உறவுகளை பலப்படுத்தவும், உடல்நலம் கெடாமல் பேணிக்காக்கவும் உகந்த பாரம்பரியமான ஏற்பாட்டில் தொய்வும் தொடங்கி விட்டது. அனைத்து உணவு வகைகளையும் தயாரித்து பொட்டலமிட்டு விநியோகிக்கும் நிலையும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. விளைவாக வீடுகளில் இனி சமையல் அறைகளே தேவையில்லை, பொது சமையலகங்கள்  உருவாக வேண்டும் என்று சில ஊடகங்களில் சிலாகிப்போரும் பெருகி வருகிறார்கள். இனி உணவகங்கள் மட்டுமே மக்களின் உணவுத் தேவைக்கான தீர்வு என்றாகிவிடுமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.
  இத்தகைய சூழலில் அனைவருக்கும் கிடைக்கும் உணவில் மறைந்து கிடக்கும் வணிக தந்திரங்களையும், புதைந்து கிடக்கும் உடல்நலக் கேடுகளுக்கான காரணிகளையும் முறியடிக்க நுகர்வோருக்கு தேவை விழிப்புணர்வு. ஆனால் அத்தகைய விழிப்புணர்வு இந்தியர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.
 நுகர்வோர் பாதுகாப்புக்கும் உணவு பாதுகாப்புக்கும் இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு குறையேதும் இல்லை. ஆனால் அவற்றை மக்கள் எந்த அளவுக்கு பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் கேள்விக்குறி.