புதன், 29 ஆகஸ்ட், 2018

ஒருமன்னன் எப்படி இருக்க வேண்டும் 

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்

துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும! நின் ஒன்னா தோர்க்கே- அவ்வை மூதாட்டி

மன்னனே! நீ, பாகனால் அழைத்துச் செல்லப்பட்டு நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை, அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் சிறார்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். ஆனால் பகைவர்களுக்கோ மதம்பிடித்து பிளிறிக் கொண்டு வீதிகளில் சீற்றத்துடன் வலம்வரும் பட்டத்து யானை போன்றவன் நீ!

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

நுகர்வோருக்கு தேவை விழிப்புணர்வு

உணவு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள்:
மக்களுக்கு தேவை விழிப்புணர்வு

  தரமற்ற உணவுப் பொருள்களை விநியோகித்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம், தவறான குறியீடு செய்து விற்றால் ரூ.3 லட்சம் அபராதம், உணவுப் பொருள்கள் பற்றி உண்மைக்கு மாறான விளம்பரம் செய்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம், உணவுப் பொருள்களில் வேறு பொருள்களை சேர்த்து விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் உத்தரவுகளை நடைமுறைப் படுத்த மறுத்தால் ரூ.2 லட்சம் வரை அபராதம், சுகாதாரத்தை புறக்கணித்து கவர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு உணவுப் பொருள்களை தயாரித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம், பாதுகாப்பற்ற உணவை வைத்து இருந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம், உணவுப் பாதுகாப்பு அதிகாரியின் செயல்பாட்டை தடுத்தாலோ, ஆள்மாறாட்டம் செய்தாலோ ரூ.5 லட்சம் வரை அபராதம், இப்படி குறைபாடுகளுக்கு அபராதம் விதிக்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
 இந்த விதிமுறைகள் எல்லாம் வேறு எங்கோ ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அல்ல, நமது இந்தியாவில்தான். ஆச்சரியமாக இருக்கிறதா?  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டத்தில்தான் மேற்கண்ட அபராதப் பட்டியல் காணப் படுகிறது. ஆனால் இச்சட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுகின்றனவா? மக்களிடம் கேட்டால் எங்கே  என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.
  மேலாளராக பதவி உயர்வு வேண்டுமா, உழைப்பும் திறமையும் தேவையில்லை,   சலவைப் பௌடரை மாற்றினால் போதும். சோடாதான் மனிதனின் தலைமைப் பண்பின் உந்துசக்தி என்று ஒரு விளம்பரங்கள் அடித்துக் சொல்கின்றன. இந்த ஊக்க பானத்தை அருந்தினால் உடனேயே 3 அங்குலம் குழந்தைகள் கூடுதலாக வளர்ந்து விடுவார்கள் என்கிறது மற்றொரு விளம்பரம். கத்தரிக் காயா, பீன்ஸா காய்கறிகளை யாராவது உணவில் சேர்ப்பார்களா? நாங்கள் தரும் ஊட்டச் சத்து உணவை கொடுத்தால் போதும், அனைத்து காய்கறி சத்துகளும்  வந்துவிடும். சாப்பிடாத குழந்தை சாப்பிடத் தொடங்கி வேகமாக வளர்ந்து விடும் என்றெல்லாம் மக்களுக்கு விளக்க உரை நிகழ்த்துகின்றன.
 அம்மாக்களாகவும், மருத்துவர்களாகவும், வந்து மக்களை ஏமாற்றுவதில் இந்திய விளம்பரங்களுக்கு ஈடு இணையே இல்லை. இப்படி எல்லாம் மேலை நாடுகளில் விளம்பரம் செய்துவிட முடியாது. விளம்பரத்தில் உள்ளபடி இல்லா விட்டால், அப்பொருள்களை சந்தைப் படுத்தவே முடியாது. ஏமாந்தவர்கள் இந்தியர்கள்தான் என்பதை பறை சாற்றுவதுதான் இந்த ஏமாற்று விளம்பரங்கள்.
 ஆனால் இந்திய சந்தைகளையும் ஊடக விளம்பரங்களையும் பெருவாரியாக ஆக்கிரமித்து, மக்களின் வருவாயில் பெரும்பகுதியை கபளீகரம் செய்து, பல்லாயிரம் கோடிகளை வாறிச் செல்லும் கார்பரேட் நிறுவனங்கள்தான் இந்தியாவை ஆளப் போகின்றன. 
 இப்படி கோடிகளை அள்ள அப்பாவி மக்களை திசை திருப்பும் விளம்பரங்கள் ஒரு புறம், வீடுகளில் உணவு தயாரிப்பது உறவுகளை பலப்படுத்தவும், உடல்நலம் கெடாமல் பேணிக்காக்கவும் உகந்த பாரம்பரியமான ஏற்பாட்டில் தொய்வும் தொடங்கி விட்டது. அனைத்து உணவு வகைகளையும் தயாரித்து பொட்டலமிட்டு விநியோகிக்கும் நிலையும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. விளைவாக வீடுகளில் இனி சமையல் அறைகளே தேவையில்லை, பொது சமையலகங்கள்  உருவாக வேண்டும் என்று சில ஊடகங்களில் சிலாகிப்போரும் பெருகி வருகிறார்கள். இனி உணவகங்கள் மட்டுமே மக்களின் உணவுத் தேவைக்கான தீர்வு என்றாகிவிடுமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.
  இத்தகைய சூழலில் அனைவருக்கும் கிடைக்கும் உணவில் மறைந்து கிடக்கும் வணிக தந்திரங்களையும், புதைந்து கிடக்கும் உடல்நலக் கேடுகளுக்கான காரணிகளையும் முறியடிக்க நுகர்வோருக்கு தேவை விழிப்புணர்வு. ஆனால் அத்தகைய விழிப்புணர்வு இந்தியர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.
 நுகர்வோர் பாதுகாப்புக்கும் உணவு பாதுகாப்புக்கும் இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு குறையேதும் இல்லை. ஆனால் அவற்றை மக்கள் எந்த அளவுக்கு பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் கேள்விக்குறி. 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

மீத்தேன் வாயுவின் மறுவடிவம் ஷேல் எரிவாயு


  
மீத்தேன் மறுவடிவம் ஷேல் எரிவாயு

 பூமிக்குள் குறைந்த ஆழத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தும் இயற்கை எரிவாயு, 1500 அடி ஆழத்தில் எடுக்கப்படும் மீத்தேன் வாயு போன்று 7 ஆயிரம்
முதல் 10 ஆயிரம் அடி ஆழத்தில் களிமப் பகுதில் உரைந்து கிடக்கும் எரிவாயுதான் ஷேல். இயற்கை எரிவாயுக்கள் (Compressed Natural Gas, CNG) என்பது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி போன்றவற்றிற்கு மாற்றாக பயன் படுத்தப்படும் புதைபடிவ எரிமங்களுள் ஒன்று ஷேல் எரிவாயு.
  இயற்கை எரிவாயுக்கள் அனைத்தும் பூமிக்குள் பாறை உடைப்புகளில் தேங்கி இருப்பவற்றை வெளியே கொண்டு வருவது. ஆனால் ஷேல் எரி வாயு அப்படி அல்ல களிமப் பகுதியில் இருக்கும் பாறைகளை செயற்கை முறையில் உடைத்து பிளவுகளை உண்டாக்கி, அதில் இருந்து பெறப்பட வேண்டும். இதற்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படுகிறது. மீத்தேன் எரிவாயுவை எடுக்க எத்தகைய ஃபிராக்சரிங் முறை பயனபடுத்தப் படுகிறதோ அதே தொழில் நுட்பம்தான் ,ஷேல் உற்பத்தியிலும்  பயன்படுத்தப்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
  உலகில் 38 நாடுகளில் ஷேல் எரிவாயு இருப்பது கண்டறியபபட்டு உள்ளது. அமெரிக்காவில் அலாஸ்கா பகுதியிலும், ரஷ்யாவி்ல் சைபீரியா பகுதியிலும் பெருமளவு ஷேல் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. வட அமெரிக்காவில், ஷேல் எரிவாயு உற்பத்தி 2020க்குள் மொத்த எரிவாயு உற்பத்தியில் 50 சதமாக இருக்கும் என்கிறார்கள்.
 ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஷேல் எரிவாயு மிகக் குறைவாகவே உள்ளது. (உலக படத்தை பார்க்கவும்) குஜராத்தின் காம்பே வளைகுடா, கிருஷ்ணா-கோதாவரி, காவேரி, தாமோதர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஷேல் எரிவாயு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எனினும் இப்பகுதிகள் அனைத்தும் மக்கள் தொகை மிகுந்த, வேளாண்மை சிறந்து விளங்கும் பகுதிகள் ஆகும்.
 அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டுமே தற்போது ஷேல் எரிவாயு எடுக்கப் படுகிறதாம். இந்தியாவில் சொந்தக் காலில் நின்று ஷேல் எரிவாயுவை எடுத்து நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் திறன் .என்.ஜி.சி, கெயில் போன்ற இந்திய அரசு நிறுவனங்களுக்கு இல்லை. அவை வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன.
 இந்தியாவின் மொத்த தேவையில் உள்நாட்டு குரூட்ஆயில் உற்பத்தி சுமார் 25 சதமாக இருக்கிறதோ, அதுபோலவே ,ஷேல் போன்ற எரிவாயுக்களின் உற்பத்தியும் மிகக்குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த உற்பத்தியும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ள முடியும். அந்த நிறுவனங்கள் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்போது, இந்தியாவுக்கு எந்த வகையில் பயன் அளிக்க முடியும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
  ஷேல் எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் இல்லை என்றும் கூறிவிட முடியாது. நிலக்கரியைப பயன்படுத்துவதைவிட சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து , ஷேல் எரிவாயு எடுக்கும் முயற்சியில், காவிரி டெல்டா உள்ளிட்ட மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசு படாது என்பதற்கும் வேளாண்மை பாதிக்கப்படாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
  நிலத்தின்கீழ் என்ன கிடைத்தாலும் அது நில உரிமையாளருக்கே சொந்தம் என்பதுதான் அமெரிக்காவின் சட்டம். எனவே அங்கு தனியார் நிறுவனங்கள், நில உடைமையாளர்களிடம் அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்குவார்கள். நல்ல விலை கிடைத்தால் நிலத்தை விற்கப் பலரும் முன்வருவார்கள்
    ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல நிலத்துக்கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் அரசுக்கே சொந்தம். என் வீட்டின் அடியில் உள்ள நிலத்தில் வைரம் கிடைக்கிறது என்று தெரிந்தால், அரசு எனக்கு ஏதோ கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு, நிலத்தை எடுத்துக் கொண்டு துரத்திவிடும். அதுவும் வர இருக்கும் நிலம் கையகப் படுத்தும் சட்டத்தின் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் நிலஉரிமையாளர்களை துரத்திவிட முடியும். நீதிமன்றம்கூட செல்ல  முடியாது
 எனவே காவிரி் டெல்டா பகுதியில் ஷேல் எரிவாயு எடுப்பது என்பது, போராட்டங்களால் விரட்டப்பட்ட மீத்தேன் எரிவாயுத் திட்டத்தின் மறுவடிவமாகத்தான் இருக்கமுடியும். ஏற்கனவே எண்ணை எரிவாயு துரப்பணக் கருவிகளால் சீர்குலைந்து விட்ட டெல்டா நிலங்கள் மீண்டும் ஒரு அழிவைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்து

 அப்படியே வலுக்கட்டாயமாக மக்களை மிரட்டி ஷேல் எரிவாயு உற்பத்தி செய்தாலும் அது 10 ஆண்டுகளுக்குள் முடிவடைந்து (அமெரிக்காவில் ஷேல் எரிவாயு 100 ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தாலும், 11 ஆண்டுகளுக்கு கிடைப்பதையே விஞ்ஞானிகள் உறுதி செய்து இருக்கிறார்களாம்டெல்டா மாவட்டங்கள் தரிசு நிலங்களாக, சுடுகாடாகத்தாதன் காட்சி அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முகநூலில் முகிழ்க்கும் விவசாயம்

    வாழ்க்கை முறையாகிறது  
         மீண்டும்  விவசாயம்
       (நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வார இதழில் வெளியான கட்டுரை)

     "எருக்கலை, சணப்பைக்கு அடுத்து மிகச்சிறந்த தழை உரம் கொழிஞ்சி. கொழிஞ்சியில் மணிச்சத்து மிகஅதிகம். கொழிஞ்சியை மடக்கி உழவு செய்யாமல் விட்டு விட்டால், அது உழவில்லா வேளாண்மைகொழிஞ்சியின் அருமையை உணர்த்தியதற்கு நன்றி"
    "விதை உண்டாகும் முன்னரே சாரணைக் களையை மடக் உழவு செய்ய வேண்டும். இல்லையேல் பேய்த்தனமாக பரவிவிடும், கால்நடைகளுக்கும் உதவாது. சாரணைக் களையை லேசாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்"  
   "கொழிஞ்சி விதைகளை நிலத்தில் கொட்டினால் போதும். மழையில் முளைத்து, தோட்டம் முழுவதும் நிரம்பி விடும். சிறந்த மூடக்காக செயல்படும். தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. கொழிஞ்சி, பசுந்தாள் உரம் மாட்டும் அல்ல அது காற்றில் உள்ள தழைச்சத்தை, மண்ணில் நிலை நிறுத்தி வைக்கிறது"
  "இப்போது கொழிஞ்சியின் இடத்தை பார்தீனியம் பறித்து கொண்டது துரதிருஷ்டம். வளர்க்க வேண்டியவை அழிக்கப்பட்டு, அழிக்க வேண்டியவை வளர்க்க பட்டுவிட்டது, கடந்தகால விவசாயத்தின் பரிதாபம். பல அர்த்தம் சொல்கிறது இந்த வரிகள். உங்கள் பதிவுகள் என்னை வேளாண் பண்ணைக்கே அழைக்கிறது"
   "கத்திரி நடவுசெய்துள்ளேன். தொழுஉரம் (மாட்டு சாணம்) அதிகமாக இட்டிருக்கிறேன் இதனால் வேர்ப்புழு வரும் என்று நண்பர் கூறினார். அப்படி வரும? வந்தால் இயற்கை முறையில் எப்படி சரி செய்வது" இது கேள்வி. அடுத்த பதிவு "வேப்பம் பிண்ணாக்கு போடச் சொல்லி நண்பர் வழிகாட்டினார்
     "10 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ கல்லுப்பு (சமையல் உப்பு ) கலந்து பார்த்தீனியம் செடியில் பூ பிடித்த பின் தெளியுங்கள். விதை, செடி அனைத்தும் வீரியம் அற்று அழிந்து போகும். தயவு செய்து ரசாயன களைக் கொல்லிகள் வேண்டாம்".
    "விவசாயி தனது நேரடி அனுபவத்தைச் சொல்லும்போது உண்மையான
வேளாண் கல்லூரி பாடப் புத்தகம் போல் உள்ளது. ஆனால் இவ்வளவு
அனுபவக் கல்வியை விட்டு விட்டு வேளாண் அலுவலர்களின் செயற்கைத்
தனமான இரசாயன உரக் கல்வி, இவ்வளவு காலமும் கோலோச்சியதுதான்
தமிழக வேளாண்மையை பின்னுக்குத் தள்ளியதுடன், வேளாண்மை குறித்து
இளைஞர்களின் அவநம்பிக்கைக்கும் காரணமாகி விட்டது"

   மேற்காணும் விளக்கங்கள் எல்லாம் வேளாண் துறையின் களப்பணியில் நிகழ்ந்த விவாதங்கள் அல்ல. முகநூல் பதிவுகள்தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் விவாதங்கள். சத்திய மங்கலத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி, கொளுஞ்சிச் செடியின் வேளாண் மகத்துவம் பற்றி வெளியிட்ட முகநூல் பதிவுகளின் பட்டியல். அது நீண்டுகொண்டே செல்கிறது பல நாள்களுக்கு
    சுமார் 680 பேர் இப்பதிவுக்கு "லைக்".... 200க்கும் மேற்பட்டோர் "ஷேர்"... நூற்றுக் கணக்கானோர் "கமண்ட்" செய்து உள்ளனர். இதுபோல் பல விசாயிகளின் சொந்த அனுபவங்கள், முகநூல் வாயிலாக வேளாண் ஆர்வலர்களிடம் வேகமாகப் பரவிவருகிறது. வேளாண் துறையின் எப்பதிவும் இந்த அளவுக்கு விவாதத்துக்கு வந்தது இல்லை என்கிறார்கள் விவசாயிகள்
   முகநூல் பதிவு விவசாயி திருமூர்த்தி ஒன்றும் கற்றறிந்த வேளாண் அலுவலர் அல்ல. பள்ளிப் படிப்புடன் நின்ற உண்மையான விவசாயிஅவர்போல் பல உண்மை விவசாயிகள் இன்று பெருமளவில் உதயமாகி இருக்கிறார்கள். மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி லட்சக் கணக்கில் சம்பாதித்த இளைஞர்கள் பலர், மன அழுத்தம் நிறைந்தவர்களாக மாறி, அந்த வேலையை உதறித் தள்ளி, வேளாண்மைக்குத் திரும்பி இருப்பது விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை பிரதிபலிக்கிறது. "தேசிய நெடுஞ்சாலை ஓரம் ரூ. 20 கோடி மதிப்பிலான நிலம் வைத்து இருக்கிறேன். வீட்டுமனைக்கு நிச்சயம் கொடுக்க மாட்டேன் விவசாயம்தான் செய்வேன்" என்கிறார் மற்றொரு விவசாயி.
   அவர்கள் பழைமை கழைந்து, துணிந்து இயற்கை விவசாயத்தில் இறங்கி, பல வெற்றிகளைாக் குவித்து இருக்கிறார்கள். இன்றைய இளம் விவசாயிகளின்  வெற்றிக் கதைகளை, அதிநவீன வெகுஜன சமூக வலைத் தளமான முகநூல் மூலம் பகிர்ந்தளித்துக் கொண்டு இருப்பது மிகவும் ஆச்சரியமாகவும், இதுவரை வேளாண் துறையால் சாதிக்க முடியாத வேளாண் கல்வியாகவும் நீண்டு கொண்டே செல்கிறது.
   நவீன வேளாண்மையை கற்றுத் துறைபோகிய மூத்த வேளாண் அலுவலர் ஒருவர் வேளாண்மை குறித்து ஏதேனும் விளக்கம் அளிக்கத் தொடங்கினால் விவசாயிகள் செவிமடுக்க தயாராக இல்லை. விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்திற்கு வரும் வேளாண் அலுவலர்கள், தனது விரிவுரைகளை நிகழ்த்த நினைக்கிறார்கள். ஏன் இங்கு வந்து பேசுகிறீர்கள் என்று ஆட்சியர்கள் கேட்டால், நாங்கள் பேசினால் விவசாயிகள் வரமாட்டேன் என்கிறார்கள். இங்குதான் அவர்கள் கூடியிருக்கிறார்கள், என்று விளக்கம் அளிக்கிறார் அந்த அதிகாரி.
   காரணம் அவரது விளக்கம் வெறும் செயற்கை ரசாயனத் தன்மை கொண்டதாக, நிலத்தையைும் உணவுப் பொருள்களையும் விஷமாக்கி, மேற்கத்திய வேளாண்மைக்கு அழைத்துச் செல்வதுமாக இருப்பதுதான்.
   ஆனால் திருமூர்த்தி மட்டுமல்ல அவர்போன்ற எண்ணற்ற விவசாயிகளின்  விளக்கங்கள், வேளாண்மையை இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாக, கேட்போரின் காதுகளை படிப்போரின் கண்களை வியப்படையச் செய்பவைகளாக உள்ளன. இத்தகைய விவசாயிகள் தரும் விளக்கங்கள் விவசாயத்துக்கே புத்துயிர் ஊட்டுவதாக அமைந்து இருக்கிறது.
   இந்த நீண்ட நெடிய முகநூல் பதிவுகள் அதைத்தான் பிரதிபலிக்கின்றன. கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பயின்று வேளாண் அலுவலர்களாக வந்து இருப்போர், விவசாயிகளுக்கு வேளாண் உத்திகளை எடுத்துரைப்பது இருக்கட்டும். ஓராண்டாவது திருமூர்த்தி போன்ற நமது கிராமத்து விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் மனநிலையை, நமது பாரம்பரிய இயற்கை வேளாண் பணிகளை கொஞ்சம் புரிந்து கொண்டு, பின்னர் தங்கள் அலுவலகத்துக்குள் நுழைவது பொறுத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
   கிராமத்து மிராசுதார் நகர்புறத்துக்கு நகர்ந்து, பங்களாவில் தங்கிவேலைக்காரரிடம் நாற்று நட்டாயா? களை பறித்தாயாஉரம் போட்டாயா? எப்போது அறுவடைக்குத் தயார் ஆகும்? என்று வினாக்களை எழுப்பி்க் கொண்டு, வேளாண்மையை உபதொழிலாக, பரம்பரையாக வந்த நிலத்தை வைத்துக்கொண்டு பொழுதுபோக்காக விவசாயம் செய்வோருக்குத்தான் விவசாயம் லாபமற்ற தொழில். அத்தகைய பழைமை வாதிகளால்தான் விவசாயம் கெட்டொழிந்தது எனலாம்.
   வெறும் 2 ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு அதில் பாடுபட்டு, மகள்களுக்கு தலா 50 சவரன் நகை போட்டு, மகன்களை சிறந்த பொறியில் கல்லூரிகளில் படிக்க வைத்து முன்னேறிய குடும்பங்கள் பல உண்டு. இயற்கைச் சீற்றத்துக்கு இலக்காகாத பகுதிகளில் முறையாக விவசாயம் செய்வது இன்றும் லாபகரமான தொழில் என்பதை மேற்கு மாவட்ட மக்கள் நிரூபித்து வருகிறார்கள்
    ஒரு தொழிற்சாலையை நடத்துபவர், வளகத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறார். அல்லது அருகாமையில் வசித்துக் கொண்டு தொழிற்சாலையில் குறைந்தது 12 மணி நேரம் செலவிடுகிறார். அதுவே வேளாண்மைக்கும் பொருந்தும். வேளாண்மையையும் ஒரு தொழிற்சாலையாக கருதி முனைப்புடன் செயல்படும்போது, அது தொழிற்சாலையைவிட கணிசமான லாபத்தையும், பன்மடங்கு மன நிம்மதியையைும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் தருவதுடன், நமது பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு அத்தனையும் பேணிக் காக்கவும், அடிப்படையாக அமைகிறது என்பதும் நிதரிசனமான உண்மை. தமிழக விவசாயிகளுக்கு நிலம் என்பது வெறும் மண் அல்லை. அது அவர்களின் வாழ்க்கை
                                                                   ---- த.தேவராஜ்
-------------------

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

பூரண மதுவிலக்கு சாத்தியமா?

பூரண மதுவிலக்கு சாத்தியமா?
 
      சுதந்திர இந்தியாவுக்கு முன்னரே தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. 1944ல் மதுவிலக்கை ரத்து செய்து ஆங்கிலேய அரசு கள்ளுக் கடைகளை திறந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு மீண்டும் மதுவிலக்கு அமலானது. கள் என்பது உடல்நலனுக்கு உகந்த பானமாக கருதப் பட்டது. இதனால்தான் தென் மாவட்டங்களில் Half ana toddy soften a body என்ற பழமொழி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தது. 100 சதம் மதுவிலக்கு என்பது சாத்தியமானதே இல்லை என்றுதான் நடுநிலையாளர்கள் பலரும் கூறுகிறார்கள். இப்போதும்கூட மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் வெடித்த நிலையில் மதுவிற்பனை அமோகமாகத்தான் நடந்து இருக்கிறது.
  1967ல் தி.மு.. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு வருவாயைப் பெருக்க மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரைத்தும், முதல்வர் அண்ணா ஏற்கவில்லை. 1971 வரை இந்தியாவில் குஜராத்தும் தமிழகமும்தான் மதுவிலக்கை அமல்படுத்தின.
  மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மாநியம் என்று அறிவித்த மத்திய அரசு, அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டதால் மீண்டும் மதுக் கடைகளை திறக்க நேர்ந்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அதன் பிறகு மதுக்கடைகளை மூடுவதும் திறப்பதும் மாறிமாறி கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சி காலங்களில் நடந்து இருக்கிறது.
  இதில் மதுவிலக்கை மாநில அரசுகளின் பட்டியலில் ஒதுக்கி, மத்திய அரசு தப்பித்துக் கொண்டு உள்ளது. தேசப்பிதா காந்தியின் கொள்கையை நிறைவேற்ற வேண்டுமானால் அது, மத்திய அரசின் பட்டியலில் இருப்பதுதானே நியாயம். எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்றால்தான்  உண்மையான மதுவிலக்காக இருக்க முடியும். அது சாத்தியமா
   மதுக்கடைகளை தனியாருக்கு விட்டதில் நிகழ்ந்த குழப்பங்கள், முறைகேடுகள், அரசுக்கு நேர்ந்த வருவாய் இழப்புகள் காரணமாகவே  மதுக் கடைகளை அரசு ஏற்று நடத்தியது. ஆனால் தாராளமாக பார்களும் திறக்கப் பட்டதுதான் மது அருந்துவோர் எண்ணிக்கை பெருகக் காரணமாகி வி்ட்டது.
 தமிழகத்தில் தற்போது 6800 மதுக்கடைகள் உள்ளன. பல மதுக்கடைகளுடன் பார்கள் உள்ளன. தமிழகத்தில் பள்ளிகள் எண்ணிக்கை 4200. பள்ளிகளுக்கு அருகே 1200 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக மாணவர் அமைப்புகள் தெரிவிக்கின்றன. மதுக்கடைகள் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி வரை வருவாய் வருவதாகச் சொல்கிறார்கள்.  
  இது தமிழக அரசின் வருவாயில் 27 சதம் என்று கூறப்படுகிறது. மதுக்கடை பணிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் உள்ளனர். அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வருவாய் என்பது ஒருபுறம் இருக்க, பார்களில் குவாட்ருக்கு ரூ. 5 கூடுதல் விலை, 40 காசு பிளாஸ்டிக் டம்ளர் விலை  ரூ.7 வரைபோலி குடிநீர் பாட்டில் விலை ரூ. 25, தின்பண்டங்களின் விலை சந்தை விலையை விட பன்மடங்கு அதிகம். இந்த வகையில் சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி வரை புரளுகிறது என்கிறார்கள் சிலர்.
  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மதுவிலக்கை அமல் படுத்துவதில் தள்ளாடிய நிலையில், இப்போது 100 சதம் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமா? டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மதுவிலக்கை அமல் படுத்தினாலும், ஸ்டார் ஹோட்டல்களில் மது விற்பனையும் பார் வசதியும் இருக்கத்தான் போகிறது. சுற்றுலா விடுதிகளில் மது விற்பனை செய்தே ஆக வேண்டும்.
  ஆன் லைன் வர்த்தகம் வளர்ந்து வரும் நிலையில் மது விலக்கை அமல் படுத்தினாலும், மது பாட்டில்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாமே.
அப்படி ஒரு நிலை வரும்போது வசதி படைத்தவர்கள் எல்லாம் மது குடிக்கலாம். ஏழைகள் குடிக்க கூடாதா? என்ற விவாதம் எழுந்து விடும்.
   மது விலக்கு அமலில் இருந்த காலங்களில் எல்லாம் கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப் படாமல் பெருக்கெடுத்து ஓடியதுதான் வரலாறு. மதுவிலக்கு என்பது காவல்துறைக்கும், பல அரசியல் வாதிகளுக்கும்தான் சாதகம் என்ற கருத்தும் மறுக்க முடியாதது. மதுவிலக்கு அமலில் இருந்தபோது கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை கடுமையாக கட்டுப் படுத்திய போலீஸ் அதிகாரி ஒருவரை, பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு கள்ளச் சாராய வியாபாரி ஒருவர், புதுவையில் இருந்து விஷ சாராயத்தை பண்ருட்டி அருகே விற்று 50 பேர் இறந்தனர்நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர்.
  கள்ளச் சாராயத்தை கடுமையாக அமல்படுத்திய அந்த போலீஸ் அதிகாரியை அரசு ஒன்றும் பாராட்டி கௌரவிக்க வில்லை. கள்ளச் சாராயத்தால் கோடீஸ்வரர்களாகி, அத்தொழிலை காப்பாற்ற அரசியலுக்குள் நுழைந்து பதவிகளைப் பெற்றவர்களும் உண்டு. அப்படிப்பட்ட பலரும் அரசியல் பிரமுகர்களாக வலம்வந்து கொண்டு இருந்த காலமும் இருந்தது. தமிழக  அரசியல் சீர்கெட்டுப் போனதற்கு கள்ளச் சாராயமும் ஒரு காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வர்
   மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில்தான் கள்ளச் சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது என்கிறார்கள். அவ்வப்போது பலர் கள்ளச் சாராயத்துக்கு பலியாகிறார்கள். மதுவிலக்கு அமலில் இருந்தபோது தமிழகத்திலும் இதே நிலை இருந்தது. பல அரசியல் வாதிகள், சில அரசியல் கட்சிகளின் வருமானமே கள்ளச் சாராயமாகத்தான் இருந்தது. மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரிய, லட்சக் கணக்கில் பணம் கொடுக்க முன் வந்த போலீஸ் அதிகாரிகளையும் பார்த்து இருக்கிறது தமிழகம்.
  அளவோடு மதுக்கடைகளை மட்டும் திறந்து இருந்தால் தமிழ்நாட்டில் மது பிரச்சினை இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது. மது அருந்தும் கூடங்களை தாராளமாக திறந்ததுதான் சிறுவர் முதல் முதியோர் வரை தாரளமாக குடிக்க வசதியாய் போய்விட்டதுஇப்போதும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, பார்களை மூடிவிட்டு, பொது இடத்தில் மது அருந்தியவர்களை கடுமையாகத் தண்டித்தாலே மதுப் பிரச்சினை பாதியாகக் குறைந்து விடும். முதல் கட்டமாக பார்களை மட்டும் மூடலாமே

  தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. ஆட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான போராட்டமாக இன்று சித்திரிக்கப் பட்டாலும் முன்னிலைப் படுத்தப்பட்டாலும், பொதுத் தேர்தலில் இதனால் சாதகம் ஆளும் கட்சிக்கா? எதிக்கட்சிகளுக்கா? என்பது போகப் போகத்தான் தெரியும். பின்னணியில் அரசியல் சித்து விளையாட்டும் இருப்பதாகவே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.