வெள்ளி, 10 ஜூலை, 2015

காவிரியே ஏன் வரண்டாய்?

  காவிரியே ஏன் வரண்டாய்? 


காடுகளில் தனித்தனியே அலைந்து திரிந்த மனித இனம் கூட்டாக வாழத் தொடங்கி நதிகளின் சமவெளிகளில் வாழத் தொடங்கினான். மிகப் பழைமை வாய்ந்த திராவிடக் கலாசாரம் என்று, அண்மையில் உறுதி செய்யப்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் முதல், அனைத்து நதிகளின் சமவெளிகளிலும் நாகரீக மனிதன் வாழ்ந்து, விவசாயத்தை தலையாக தொழிலாக மேற்கொண்டான்.
  அணைகள் கட்டப்படாத காலத்தில் நேரடியாக வாய்க்கால்கள் மூலமாகத்தான் மனிதன் விவசாயம்செய்து இருக்க முடியும். அந்த வகையில் காவிரியை ஆதிகாலம் தொட்டு முழுமையாக பயன்படுத்திக் கொண்டவன் தமிழனாகத்தான் இருக்க முடியும். காவிரி ஆற்றுக்கு நீண்ட சமவெளிப் பகுதி தமிழகத்துக்குத்தான் அதிகம் உண்டு. அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் மேற்கொண்ட பின்னர்தான் கர்நாடகப் பகுதியில் காவிரி விவசாயமே தோன்றி இருக்க முடியும்.
  அதற்கும் முன்னோடியாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சோழவள நாட்டில்  கரிகால் சோழன் கல்லணை கட்டிய  பிறகுதான் அந்த மாற்று விவசாய சிந்தனையே கர்நாகத்துக்கு வந்து இருக்க முடியும். சமஸ்தான ஆட்சி முறையால் இந்தியா பல 100 நாடுகளாகப் பிரிந்து கிடந்த காலத்தில் எத்தனையோ சமஸ்தானங்கள் குட்டி குட்டி நாடுகள் வழிகத்தான் காவிரி பாய்ந்தோடி இருக்க முடியும். அப்போதும் சோழ வள நாடுதான் காவிரியை முழுமையாகப் பயன்படுத்திய பெரிய நாடாக இருக்க முடியும். பல காலங்களில் பல எல்லைகளை கடந்து வந்த காவிரி இன்று 4 மாநில பிரச்சினையாக இருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் இதே எல்லைகள்தான் என்று முடிவாகச் சொல்லி விடமுடியாது.
  இவற்றை பகுத்தறிந்து பார்க்கும் நிலையில் காவிரியில் அதிக உரிமை கொண்ட தமிழ் நாட்டுக்கு, காவிரியை பாலைவனமாக மாற்ற முனைவது தமிழனுக்கு இழைக்கப்படும் எத்தனை கொடுமை?  காவிரியின் தலைவன் (கணவன்) சோழ மன்னன் என்று சங்க இலக்கியம் தொடங்கி பல்வேறு தமிழ் இலக்கியப் பதிவுகளும் குறிப்பிடுகின்றன. காவிரியின் தலைவன் கர்நாடக நவாப் என்றோ அவருக்கு முந்திய கர்நாடகப் பகுதி மன்னன் என்றோ… வரலாறோ இலக்கியமோ இல்லை.
  இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் காவிரியைப் பாடியபோது, அந்தக் காவிரி எத்தனை அழகாக எத்தனை ஆழ அகலம் கொண்டதாக எத்தனை அர்த்தம் கொண்டதாக பாடி இருக்கிறார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகளின் கருத்தை, காவிரியின் தலைவன் சோழமன்னன் என்ற ஆழமான அழுத்தமான கருத்தை அப்போதே கர்நாடகம் எதிர்த்திருக்க வேண்டும். எதிர்க்காத காரணம் அவர்களுக்கு அப்போது காவிரி பயன்பட்டதில்லை என்றுதான் சொல்ல முடியும். தனது மாநிலம் வழியாகப் பாய்ந்தோடிய நதியை பயன்படுத்தத் தெரியாத இயலாமையில் இருந்தவன், இன்று வந்து சொந்தம் கொண்டாடுவதுதான் வியப்பான விஷயம்.
  சிலப்பதிகார வரிகள் இதோ:
      மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
      கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!
      கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
      திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி
  கரைகள் எங்கும் வண்டினங்கள் ரீங்காரமிட... சோலைகளில் இருந்த உதிர்ந்த பூக்களை ஆடையென அழகாக போர்த்தி.... கயல் மீன்களே கண்களாக சிமிட்டிக் கொண்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த காவிரி.... இப்படி வறண்டு கிடக்கிறாளே.....!   
   ஒரு வேளை அதே பாடலில் இளங்கோவடிகள் கூறியதுபோல், காவிரியின் கணவனாக வர்ணிக்கப்படும் சோழமன்னன், செங்கோல் வளையாமல் நீதி நெறியுடன் ஆட்சி நடத்தியதால்தான் காவிரி இவ்வாறு அழகாக நடக்கிறாளாம்..... ஒரு வேளை இன்றைய ஆட்சியாளர்கள் நீதிநெறி தவறியதால்தான் காவிரி ஆறு வறண்டபோயிற்றோ? 
                                                         ---த.தேவராஜ்.


Top of Form
--------------------------------------------

Bottom of Form


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக