செவ்வாய், 7 ஜூலை, 2015

பகல் கொள்ளையாகும் சுங்கக் கட்டண வசூல்

              
         பகல் கொள்ளையாகும்
    சுங்கக் கட்டண வசூல்
 கடலூர்:
    சுங்கம் வசூலிப்பது என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளாக  சமஸ்தானங்களாக இருந்த காலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்ல சுங்கம் வசூலிக்கப் பட்டது உண்மைதான். ஆனால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற சங்ககாலப் பாடலை பெருமையுடன் சொல்லிக் கொண்டு, இக்காலத்தில் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கே சுங்கம் வசூலிக்கப் படுகிறது. தமிழ் நாட்டில் கி.பி.1070 முதல் 1120 வரை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் நிலவரி தவிர்ந்த ஏனைய வரிகள் அனைத்தையும் ரத்து செய்ததால், "சுங்கம் தவிர்த்த சோழன்" என்று பெயர் பெற்றான். சுங்கமோ வரியோ மக்களுக்கு பெரும் சுமைதான், எனவே அவைகள் ரத்து செய்யப் படும்போது மக்கள் அடையும் ஆனந்தத்தை சுட்டிக் காட்டுவது தான், குலோத்துங்க சோழனுக்கு கிடைத்த இந்த விருது.
   இந்தியாவில் இன்று வரி வசூல், சுங்கம் வசூல் போன்றவை கணக்கில் அடங்காதவை. இன்னும் என்ன வரி வசூலிக்கலாம் என்ற ஆய்விலேயே அரசுகள் மூழ்கி இருக்கின்றன. வரி வசூலிப்பதில் தவறு இல்லை ஆனால் வசூலிக்கப்படும் வரி எதற்காக பயன்படுகிறது, எவ்வாறு செலவிடப் படுகிறது  என்பதுதான் கேள்வி. ஆனால் அதற்குத்தான் சரியான நியாயமான பதில் இல்லை.
   இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 263 சங்கச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 40 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 18 ம் தனியார் கட்டுப்பாட்டில் 21 ம் உள்ளன. ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன
 பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் சாலைகள் போடப்பட்டு பராமரிப்பும் செய்வதாகக்கூறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தப் படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இவ்வளவு கட்டணம் வசூலித்தும் அதை வைத்து சாலை பராமரிப்பு முறையாக நடப்பது இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக் கின்றனர். பல சுங்கச் சாவடிகளில் அடியாட்களை வைத்து வசூலிக்கிறார்கள். இவற்றில் பணிபுரிவோர் 90 சதம் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாட்டுச் சாலைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்  சுங்கம் வசூலித்து, அதன் மூலம் தமிழனுக்கு வேலை வாய்ப்புகூட இல்லை என்ற நிலை பரிதாபகரமானது.
   சாலைகள் போட்டு 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் கட்டணம் வசூல் செய்யலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் எதிலும் சுங்கம் நிறுத்தப்பட வில்லை.வசூல் வேட்டை தொடர்கிறது. மேலும் கட்டண வசூலில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. சீனாவிலும் சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஆனால் அவற்றில் கட்டணம் எப்போது முதல் வசூலிக்கப் படுகிறது. எந்தத் தேதி வரை வசூலிக்கப்படும். இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு போன்ற பல்வேறு விவரங்கள் வெளியிடப் படுகிறது.
 தொடக்கத்தில் 40 கி.மீதூரத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப் பட்டது. இப்போது ரூ.70 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகளில் ரூ.150 வரைகூட வசூலிக்கப் படுகிறது. தமிழகத்தில் 18 சுங்கச் சாவடிகள் உள்பட இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகள் அனைத்திலும் ஏப்ரல் 1 முதல் 5 முதல் 13 சதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் அறிவித்து உள்ளனர்.
   சுங்கச் சாவடிகளுக்கான நிபந்தனைகளில், வாகன எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அதன் அடிப்படையில், சுங்க கட்டணம் குறைக்க வேண்டும். ஆனால் ஆண்டு தோறும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்தமிழகத்தில் உள்ள ஒரு சாலை ரூ. 257 கோடியில் அமைக்கப்பட்டு, 19 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. செங்கல்பட்டு அருகே ஒரு சுங்கச் சாவடியில் மட்டும் 2010 வரை ரூ. 2,500 கோடி வசூலிக்கப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 263 சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 5,400 கோடி வரை கட்டணம் மறைக்கப் படுவதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன.

  "ஒரு வாகனம் விற்பனையாகி சாலையில் ஓடத் தொடங்கும்போதே அவற்றுக்கு சாலை வரி செலுத்தப்பட்டு விடுகிறது.  2013–ம் ஆண்டு மத்திய அரசும் சுங்க கட்டணம் உயர்வு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவும் தனது அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஆண்டே சமர்ப்பித்தது. எனினும் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யாமல், வசூலிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் நிர்ணயம் செய்து ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டும்" என்கிறார்கள் லாரி உரிமையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக