திங்கள், 6 ஜூலை, 2015

வீழ்ச்சிக்கு வித்திடலாமா வளர்ச்சி? ;சிட்டுக் குருவி தரும் பாடம்

வீழ்ச்சிக்கு வித்திடலாமா வளர்ச்சி

                                                       சிட்டுக் குருவி

                                                          தரும் பாடம்
  கடலூர்:
  ஆண்டு தோறும் மார்ச் 20 உலக சிட்டுக் குருவி தினம். சின்னஞ்சிறு சிட்டுக் குருவிக்கு உலக அந்தஸ்தா? காரணம் இல்லாமல் இல்லை.
  30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது வீடுகளில், உள் அரங்குகள் வரை சுதந்திரமாக சுற்றித் திரிந்த சின்னஞ்சிறிய பறவை இனம் சிட்டுக் குருவி. தாழ்வாரங்களில், கூரைகளில் மிகவும் சுதந்திரமாக கூடுகட்டி இனப் பெருக்கம் செய்த இந்த பறவையை இப்போதும் காணோம்.
   இப்பறவையை நமது பிள்ளைகளுக்கு உடனே காண்பிக்க வேண்டுமாயின் படங்களில் மட்டுமே காட்ட முடிகிறது. எங்கோ சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சி தரும், அழிவின் விழிம்பில் இருக்கும் பறவை இனமாக சிட்டுக்குருவி மாறிவிட்டது. உலகெங்கும் வாழ்ந்த சிட்டுக் குருவிகளில் கடந்த 25 ஆண்டுகளில் 60 சதம் அழிந்து விட்டன என்பது அதிர்ச்சி தரும் தகவல்.
  உலகம் போற்றும் பறவைகள் ஆர்வலர், ஆராய்ச்சியாளர் சலீ்ம் அலிக்கு பறவைகள் மீது ஈரப்பை ஏர்படுத்தியதே இந்த சிட்டுக்குருவிதான் என்பதும் வியப்பான விஷயம்.
 சிட்டுக்குருவிகளை அழிவின் விழிம்பில் இருந்து காப்பாற்ற, அதுபற்றி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவே, உலக சிட்டுக்குருவிகள் தினம்  2010-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப் படுகிறது. மனிதனின் வாழ்விடத்தையே தனதாக்கி, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஒரு பறவை அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக் குருவியை இன்று காணோம்.
  பெரும்பாலும் பூச்சிகளையும் தானியங்களையும் உணவாக தின்னும் சிட்டுக் குருவிகள், மத்திய தரைக்கடல் நாடுகளில் தோன்றி, வடஅமெரிக்காவில் அறிமுகம் ஆகி பிறநாடுகளுக்கும் பரவியதாக சிட்டுக் குருவியின் அறிவியல் வரலாறு தெரிவிக்கிறது
  இவைகள் கூட்டமாக நின்று மண் குளியல் போடுவதும், நீர் நிலைகளில், மழை காலங்களில் நீர் குளியல் செய்வதும் பார்த்து வியக்கும் விஷயங்கள்.   கூட்டமாக வாழும் இப்பறவை இனம் கூடுகட்டும் அழகே அலாதி. கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளில் அரிசியையும் பிறதானியங்களையும் முறத்தால் புடைத்து சுத்தம் செய்த காலம் மலையேறிப் போனபின், சிந்திச் சிதறும் தானியங்களால் வயிற்றை நிரப்பிக் கொண்ட இந்த சிட்டுக்குருவிகளுக்கு உணவு எங்கிருந்து கிடைக்கும். நகர மயமாக்கலும் சிட்டுக் குருவிகளுக்கு ஆபத்தைக் கொண்டு வந்தன.
 பசுமைப் புரட்சி என்ற பெயரால் பூச்சி கொல்லி மருந்து களையும் ரசாயன உரங்களையும் பயன்படுத்தியதால், விவசாயத்தில் நிகழ்ந்த வன்முறைகள் விளை நிலங்களை எல்லாம் விஷமாக்கி விட்டன. நிலத்தில் நன்மை தரும் பூச்சிப் புழுக்களும் அழிக்கப்பட்டு, விளைச்சல் பாதித்தது மட்டுமன்றி அவற்றை உணவாகக் கொண்ட சிட்டுக் குருவிகளும் உணவின்றி தவித்தன.
 உலகம் முழுவதும் ஏற்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சியும் மாற்றங்களும் ஆகாய விரிவையே பாழ்படுத்தி வருகின்றன. தடுக்கி விழுந்தால் செல்போன் கோபுரங்கள் என்ற நிலையும், அவற்றில் இருந்து வெளியேறும் அளவுக்கு அதிகமான மின்காந்த அலைகளும் சிட்டுக் குருவிகளை சின்னா பின்னமாக்கி, அவற்றின் முட்டைகளின் பொறிக்கும் திறனை பாழ்படுத்தி விட்டன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். .
  வளர்ச்சி என்ற பெயரால் மனிதனின் பொருள் குவிக்கும் வெறியால், 30 ஆண்டுகளில் சிட்டுக் குருவிகளுக்கு நேர்ந்த கதி, ஏனைய பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இறுதியாக மனிதனுக்கும் நேர்வதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகிவிடப் போகிறது, என்பதுதான் சிட்டுக் குருவிகளின் அழிவு நமக்கு விடும் எச்சரிக்கை. இயற்கையை ஒழித்தழித்து, அதன்மேல் கட்டப்படும் வளர்ச்சி மனித இனத்தின் வீழ்ச்சிக்கு வித்திடலாமா?
                                                                       ----- த.தேவராஜ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக