வியாழன், 9 ஜூலை, 2015

கம்பீரமும் கவுரவமும் தந்த கலைக் கூடம் கடலூர் ஆட்சியர் அலுவலகம்.

   கம்பீரமும்  கவுரவமும்
தந்த  கலைக் கூடம்



 கடலூர்
 எத்தனை கோடி செலவிட்டு புதிய கட்டடம் கட்டினாலும்  100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு இணையாகப் போவதில்லை என்பதற்கு சாட்சி, கடலூர் மாவட்ட ஆட்சியரின் தற்போதைய அலுவலகம்தான்.
  தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக் கட்டடத்தில் இருந்து பெயர்ந்து, புதிய கட்டடத்தில் விரைவில் குடியேறப் போகிறது
   என்பது  தவிர்க்க முடியாது.



  செம்மை நிறத்தில் கம்பீரமாக் காட்சி தரும் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 100 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகமாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதன்முன் விரிந்து கிடக்கும் மஞ்சக்குப்பம் மைதானம், புல்வெளி போர்த்திய  மிகப்பெரிய காோல்ப் மைதானமாக இருந்தது, இப்போது இந்தியர்களின் கண்பட்டு களையிழந்து காட்சி அளிக்கிறது.
    ஒரு குளிர் காலத்தில் மிளகு விலை திடீரென உயர்ந்து விட்டதால் அதிர்ந்து போன ஐரோப்பியர்கள், மிளகுக்காக அராபிய இடைத் தரகர்களை இனி நம்பினால், விலையேற்றத்தை சந்திக்க இயலாது என்று உணர்ந்தனர். விளைவு ஐரோப்பிய வணிகர்களால் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப் பட்டது.
  இந்திய துணைக் கண்டம் கண்டு பிடிக்கப்பட்டு கிழக்கிந்திய கம்பெனி வணிகத்துக்காக இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலேயர்களின் முதல் தலைமையகம் கடலூர் என்கிறது வரலாறு. அதுவே ஆங்கிலேய அரசுக்கு இந்தியா அடிமையாகக் காரணமாகவும் அமைந்தது. வணிகமே ஒரு நாட்டை அடிமைப் படுத்த காரணமாயிற்று. இன்றும் உலகமயம் ஆக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவுக்குள் வணிகத்தின் பெயரால் எல்லா நாடுகளும் நுழைந்து கொண்டுதான் இருக்கின்றன. அது வேறு விஷயம்.
   தொன்மை வாய்ந்த பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைத்தே புதிய ஆட்சியர் அலுவலகத்தை கட்டலாம் என்ற ஆலோசனை எடுபடாமல் போயிற்று. தற்போதைய தொன்மை வாய்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத்தனையோ அரசியல் முடிவுகளுக்கு களமாய் இருந்து இருக்கும். பல வரலாற்று நாயகர்கள் ஆட்சியர்களாக இக்கட்டடத்தை அலங்கரித்தும் இருக்கிறார்கள்.
   இக்கட்டடம் கம்பீரத்தில் மட்டுமன்றி, காற்றோட்டத்துக்கும் பஞ்சம் இல்லாதது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் மின்விசிறி இன்றியே இதில் குளுமையான சூழலில் பணியாற்ற முடியும். அழகாக வடிவமைத்து நேர்த்தியாக சுடப்பட்ட செங்கலும் சுண்ணாம்பும் கொண்டு கட்டடப்பட்ட இக்கட்டடத்தின் உறுதித் தன்மைக்கு, வேறெந்த கட்டடமும் இணையாக இருக்க முடியாது.
   இன்றைய செங்கற்கள் கட்டும்போதே கரைந்து விடும் நிலையில், சில இடங்களில் கழிப்பறைகளைக் கட்டி, முறையான கட்டுமானமும் பராமரிப்பும் இல்லாததால் கசிந்த நீரால் வீணான செங்கற்கள் தவிர, வேறெந்த செங்கலும் 100 ஆண்டுகள் ஆகியும் பழுதடையாமல் இருப்பது மிகவும் வியப்பான விஷயம் ஆகும்
   400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் கிளைவ் வாழ்ந்த பங்களா, ஆட்சியரின் முகாம் அலுவலக அந்தஸ்தை பெற்று, அதுவே நிரந்தர ஆட்சியர் அலுவலகமாகவும் மாறிவிட்டது. தொன்மை வாய்ந்த ஆட்சியர் அலுவலகம் தேர்தல் காலங்களில் மட்டுமே ஆட்சியர்கள் அமர்ந்து பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது வேதனை தரும் விஷயம்தான்.
    இதில் அமர்ந்து பணியாற்றுவதில் நிச்சயம் வரலாற்றுத் தொன்மையுடன், தர்பார் போன்ற அரசவை கம்பீரமும் இணைந்து இருப்பதை, வேறெந்த கட்டடத்திலும் ஆட்சியர்கள் அனுபவிக்க வாய்ப்பில்லை என்று பல முன்னாள்  ஆட்சியர்கள் தெரிவித்த கருத்தை, இங்குள்ள செங்கற்கள் எதிரொலிப்பதை பலர் உணர்ந்து இருக்கிறார்கள்.
   பெண்ணை ஆற்றங்கரையில் கட்டப்பட்டு இருக்கும் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் குடியேறப்போவது ஆட்சியர்களின் கடமையாயிற்று. ஏதோ ஒரு குளிர்சாதனப் பெட்டிக்கான டி.வி  விளம்பரத்தில், "தற்போது நம்மிடம் இருக்கும் குளிர்சாதனப் பெட்டி நன்றாகத்தானே இருக்கிறது" என்று தந்தை கூற,  "ஸ்மாட்டாக இல்லையே" என்று மகன் கூறும் காட்சிதான் இங்கே நினைவுக்கு வருகிறது நமக்கு.
   மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும்போது கட்டடப் பராரிப்புக்கு கூடுதல் வாய்ப்பும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் இருக்கும். இக்கட்டடம் வேறு அலுவலகங்களாக மாறும்போது அதே கவனிப்பும், அதே பராமரிப்புப் பணிகளும் தொடருமாஎன்ற கேள்வியும் எழாமல் இல்லை. தொன்மை வாய்ந்த இக்கட்டடத்தை எப்போதும் போல் சிறப்பாக பராமரிப்பதுதான் ஒரு ஆட்சியின் கடமையாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
                                                                  ----- த.தேவராஜ்.

----------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக